Pages

June 10, 2014

இறைவன் வகுத்திருக்கும் முஸ்லிம்களுக்கான பாகப்பிரிவினை!

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்.* பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும். இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்:4:11)

*ஒரு பெண், தாய், மனைவி, சகோதரி, மகள் போன்ற எந்த நிலையிலிருந்தாலும் அவளுக்கு இறந்துபோன உறவினரின் சொத்தில் பங்குண்டு. எவ்வளவு பாகத்தை அவள் பெறுவாள் என்பது அவளுக்கும் இறந்து போனவருக்கும் இடையேயுள்ள உறவின் நெருக்கத்தைக் கொண்டும், எத்தனை வாரிசுகள் இருக்கின்றனர் என்பதைக் கொண்டும் நிர்ணயிக்கப்படும். இப்படிப் பெற்ற சொத்து அவளுக்கே சொந்தம். அதை யாரும் அவளிடமிருந்து அபகரித்திட முடியாது. வேறு ஏதேனும் காரணத்தைக் கொண்டு அந்த உறவினர் சொத்துக்களில் அவளுக்கு உரியதைத் தராமல் வேறு யாருக்கேனும் தர முயற்சித்தால் சட்டம் அதை அனுமதிக்காது.
சொத்துக்களின் சொந்தக்காரர் தன்னுடைய சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை தான் விரும்புபவர்களுக்கு உயில் எழுதித் தரலாம். இது அவர் ஏனைய வாரிசுகளுக்குத் தரவேண்டியதை தடுத்திடாமல் பாதுகாக்கின்றது. கொள்கையளவில் ஆண்களும் பெண்களும் சொத்துக்களில் பங்கு பெறும் உரிமை உடையவர்கள். ஆனால் அவர்கள் பெறும் பங்கின் அளவு சற்று வேறுபடும். சிலநேரங்களில் ஆண்கள் இரண்டு பங்குகளைப் பெறுகின்றனர். பெண்கள் ஒரேஒரு பங்கினை மட்டுமே பெறுகின்றார்கள். இதை பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமாகத் தரப்பட்ட உரிமையின் அடையாளமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆண்கள் பெண்களைவிட அதிகமான பங்குகளைப் பெறுவதற்கான காரணத்தைப் பின்வருமாறு விளக்கலாம்.

முதலாவது, ஆண்களே குடும்பத்தின் அத்தனை செலவினங்களையும் கவனித்திட வேண்டியவர்களாய் இருக்கின்றனர். ஆண்கள் தங்களது மனைவி, குழந்தைகள், கதியற்ற உறவினர்கள் ஆகியோரது தேவைகளை நிறைவு செய்திட வேண்டும் எனப் பணித்துள்ளது இஸ்லாம். தன்னைச் சார்ந்து வாழ்பவர்களின் தேவைகளை நிறைவு செய்வது சட்டப்படி கடமையாகும். அதுபோலவே சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும் தன்னால் இயன்றதைத் தரவேண்டியது ஆண்களின் மீது கடமையாகும். எல்லாப் பொருளாதார சுமைகளையும் சுமக்க வேண்டியவர்கள் ஆண்களே!

இரண்டாவது, பெண்களுக்கு ஆண்களைப் போன்ற எந்தப் பொருளாதாரப் பொறுப்புமில்லை. அவர்களது சொந்த செலவினங்களும், அவர்கள் ஆடம்பர பொருளில் ஆசைப்படுவதைத் தவிர வேறு எந்த செலவும் அவர்களுக்கு இல்லை. பெண்களின் செலவுகள் அனைத்தையும் ஆண்களே கவனிக்கின்றனர். அவள் ஒரு மனைவியாக இருந்தால், அவளது கணவன் அவளது பராமரிப்பை ஏற்றுக்கொள்கின்றான். அவள் தாயாக இருந்தால் அவளது ஆண்பிள்ளைகள் அவளது பொருளாதார சுமைகளை ஏற்றுக்கொள்வர். மகளாக இருந்தால் தந்தை அவளது பொருளாதார சுமைகளை ஏற்றுக்கொள்கின்றார். சகோதரியாக இருந்தாள் சகோதரன் அவளது செலவினங்களைக் கவனித்துக் கொள்கின்றான். அவள் சார்ந்து வாழ்கின்ற அளவில் ஆண்கள் ஒருவரும் இல்லையென்றால் அங்கு ‘சொத்துக்களில் பங்கு’ என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஏனெனில் அவளுக்காக சொத்துக்களை விட்டுச் சென்றவர்கள் எவருமில்லை. எனினும் பராமரிக்க ஆளேயில்லாத பெண்கள் பராமரிப்பின்றி விடப்படமாட்டார்கள். அதுபோன்ற பெண்களைப் பாதுகாத்து பராமரித்திட வேண்டியது சமுதாயத்தின் ஒட்டுமொத்தமான கடமையாகும், அல்லது அரசின் கடமையாகும். அவள் தனது பராமரிப்பிற்குத் தேவையானதைத் தேடிக்கொள்ள ஏதேனும் உதவியோ, வேலையோ அரசு தரலாம். அப்படி அவள் சம்பாதித்தால் சம்பாதிப்பவை அனைத்தும் அவளுக்கே சொந்தம். அவள் அவளைத் தவிர வேறு யாரையும் பராமரித்திடத் தேவையில்லை. ஆனால் இதே நிலையில் ஒரு ஆண் இருந்தால் அவன் குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் கடமை உடையவனாவான்.

ஆகவே பெண்களின் பொருளாதாரப் பொறுப்புக்கள் மிகவும் குறைவு. ஆனால் ஆண்களின் பொருளாதாரப் பொறுப்புகள் மிகவும் அதிகம். அதனால்தான் சில நேரங்களில் ஆண்கள் சொத்துக்களில் சற்று அதிகமான பங்கினைப் பெறுகின்றார்கள்.

மூன்றாவதாக, ஒரு பெண், ஒரு ஆண் பெறுவதைவிட குறைவான அளவினைப் பெற்றிடும்போது, அவள் தேடிய சொத்தில் இல்லை, அவள் அவ்வாறு பெறுவது. அவள் பங்கு பெறும் அந்தச் சொத்து அவளது உழைப்பால் வந்ததில்லை. வேறு ஒருவர் உழைப்பில் சேர்த்த சொத்துக்களையே இவர்கள் பங்கு வைத்துப் பாகம் பெறுகின்றார்கள். அந்தச் சொத்து, பங்குபெறும் ஆணோ, பெண்ணோ வருந்தி சேர்த்துக் கொண்டதல்ல. வாரிசுரிமை என்பது ஒருவகை உதவியே ஆகும். இதுபோன்ற (சொத்துக்களை) உதவிகளைப் பங்கிட்டுக் கொள்ளும்போது, அதனை பெறுபவர்களின் தேவைக்கும், பொறுப்புகளுக்கும் தக்கப்படியே பங்கிட்டுக் கொள்ளவேண்டும். குறிப்பாக இறைவனின் சட்டத்தின் கீழ் செய்யப்படும் பங்கீடுகள், தேவைகள், பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பங்கிடப்பட வேண்டும்.

இப்போது, எல்லா விதத்திலேயும் பொருளாதார சுமையால் தாக்கப்பட்ட ஆண் ஒரு பக்கம், எந்தவித பொருளாதார சுமையும் அல்லது பொறுப்பும் இல்லாத பெண் ஒரு பக்கம். தம்மிடம் சிறிதளவே சொத்து அல்லது பணம் இருக்கின்றது. நாம் பெண்களுக்கு எதுவுமே தரமாட்டோம் என மறுத்து விட்டால் அது நீதிக்குப் புறம்பானதாகும். ஏனெனில் அவளும் சொத்துக்களை அல்லது பணத்தை விட்டுச் சென்றவரின் உறவின் சொந்தக்காரி. அதேநேரத்தில் நாம் ஆண்களைப் போன்றதொரு பாகத்தை அவளுக்குத் தருவோமேயானால் அது அவனுக்கு நாம் இழைக்கும் துரோகமேயாகும்.

இப்படி இருபுறமும் அநீதி இழைப்பதற்குப் பதிலாக இஸ்லாம் ஆண்களுக்கு அவர்கள் ஏற்றிருக்கும் பெரும் பொருளாதாரச் சுமைகளுக்கு ஏற்றவகையில் சற்று அதிகமான பங்கினைத் தருகின்றது. அதே நேரத்தில் இஸ்லாம் பெண்களின் உரிமையை மறந்து விடாமல் அவர்களுக்கு, அவர்களுக்கிருக்கும் மிகச்சிறிய பொருளாதாரச் சுமைகளுக்குத் தகுந்தபடி சற்றுக் குறைத்துத் தருகின்றது. உண்மையைச் சொன்னால், இஸ்லாம் இதில் ஆண்களைவிட பெண்களிடம் அதிகக் கருணைக் காட்டியுள்ளது எனக் கூறலாம். இங்கே பெண்களின் உரிமைப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு ஆண்களைப் போன்ற உரிமைத் தரப்பட்டிருக்கின்றது. ஆனால் அது ஒரே மாதிரியானதாக இல்லை. காரணம், அவர்களின் பொருளாதாரத் தேவைகளுக்கு அதற்கு மேல் தேவையில்லை. (சான்றாக திருமறையின் 4:11-14, 176 ஆகிய வசனங்களைப் பார்க்கவும்)

(இஸ்லாம் குரல் தளத்தின் “இஸ்லாத்தில் பெண்களின் நிலை” என்ற அத்தியாயத்திலிருந்து.)

No comments: