Pages

August 30, 2011

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்। அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப்படும். ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள். அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற்கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாயிற்று. (அல்குர்ஆன்: 18:30-31)

August 29, 2011

ஈமானிய உறுதி இவ்வகை சொல்லிலிருந்தே அல்லாஹ்வால் அருளப்படுகின்றது!

(இளைஞர்களாகிய) அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று "வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்" என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம். (அல்குர்ஆன்: 18:14)

August 28, 2011

மனிதனை சோதிப்பதற்காக அலங்காரமாக காட்சியளிக்கும் பூமி!

(மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம். (அல்குர்ஆன்: 18:7-8)

August 27, 2011

புனித மிக்க ரமளானில் குர்ஆன் மனித சமுதாயத்திற்கு அல்லாஹ்வால் இறக்கப்பட்டதின் நோக்கம்!

தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும், ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). (அல்குர்ஆன்: 18:1-2)

August 26, 2011

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கே சத்தியப்பாதை எனும் ஒளியைத் தருகின்றான்!

அல்லாஹ் வானங்கள், பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்)। அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை : விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும்। அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது. அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப் படுகின்றது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று, மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.(அல்குர்ஆன் - 24:35)

August 25, 2011

தனது அறிவால் அறிந்து கொள்ள இயலாததை, அதன் விளக்கம் கிடைக்காததை பொய்ப்படுத்துதல் அநியாயமே!

(குர்ஆனாகிய) இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!" என்று. அப்படியல்ல அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள். இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக. (அல்குர்ஆன்: 10:38-39)

August 24, 2011

அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான்!

"உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?" என்று(நபியே!) நீர் கேளும்। உடனே அவர்கள் "அல்லாஹ்" என பதிலளிப்பார்கள்; "அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?" என்று நீர் கேட்பீராக। உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்ள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்? பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள். உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக! அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக. உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக! அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்:10:31-36)

August 23, 2011

மாட்சிமைமிக்க அல்லாஹ்வே இவ்வுலகின் ஒரே இறைவன்!

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே! அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான். (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன்:10:3)

August 22, 2011

ஒரு முஃமினின் அசைக்க முடியாத பரிபூரண நம்பிக்கை!

(நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) "எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை. அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி" என்று நீர் கூறுவீராக! (அல்குர்ஆன்: 9:129)

August 21, 2011

இறைவழியில் ஏற்படும் துன்பங்களின் பலாபலன்கள்!

மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான். இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப்பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும்,அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை. அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான். (அல்குர்ஆன்: 9:120-121)

August 20, 2011

உண்மை முஃமின்களின் செயல்கள்!

மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டு விலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன்: 9:112)

August 19, 2011

இவ்வுலக இறைவழி இழப்புகள் முஃமின்களுக்கு ஒரு பொருட்டே அல்ல!

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன்: 9:111)

August 18, 2011

மன்னிப்புக் கோருதலையும், இறைவழி தான தர்மங்களையும் ஏற்று அருள் புரியும் அல்லாஹ்!

நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்புக் கோருதலை - ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும், அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (அல்குர்ஆன்: 9:104)

August 17, 2011

மனிதனின் அகத்தையும், புறத்தையும் தூய்மையாக்கும் ஜகாத்!

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக. இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக. நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 9:103)

August 16, 2011

நிராகரிப்பவர்களை வெளிச்சத்திலிருந்து இருளுக்கு அழைக்கும் அவ்லியாக்களான (பாதுகாவலர்கள்) ஷைத்தான்கள்!

اللّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُواْ يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّوُرِ وَالَّذِينَ كَفَرُواْ أَوْلِيَآؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள். அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். (அல்குர்ஆன்: 2:257)

August 15, 2011

உடல் உழைப்பையும் தானமாகக் கொடுத்தல்!

இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்: 9:79)

August 14, 2011

மனித உள்ளத்தில் எவ்வகை காரணங்களால் நயவஞ்சகம் உருவாகிறது?

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும், அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)

August 13, 2011

அல்லாஹ்வின் கருணையை சீக்கிரம் பெறப்போகும் கூட்டத்தார்!

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள். தீயதை விட்டும் விலக்குகிறார்கள். தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள். (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 9:71)

August 12, 2011

பாவங்களை தூண்டி, நன்மைகளைத் தடுக்கும் நயவஞ்சகப் பாவிகள்!

நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள். ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள். (அல்குர்ஆன்: 9:67)

August 11, 2011

ஏழை வரியாகிய ஜகாத்தை பெற தகுதியுடையோர் யார் யார்?

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்குர்ஆன்: 9:60)

August 10, 2011

தொழுகையில் சோம்பல், இறைவழி தானதருமங்களில் வெறுப்பு, மிகப்பெரும் நஷ்டம்

அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள். மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை. (அல்குர்ஆன்: 9:54)

August 09, 2011

இத்தகைய செயற்பாடு உள்ளவர்களே மேன்மையான முஸ்லிம்கள்!

‘(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டத்தார் தோன்றி, அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, நல்லதை ஏவித் தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டுமிருக்கட்டும். இத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள்.’ (திருக்குர்ஆன்: 3:104)

(விசுவாசிகளே!) நன்மையான காரியங்களை செய்யும்படி (மனிதர்களை) ஏவி, பாபமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள் தாம், மனிதர்களில் தோன்றிய சமுதாயத்தார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள்.’ (திருக்குர்ஆன்: 3:110)

‘(விசுவாசிகளே!) அவ்வாறே, (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான சமுதாயத்தினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சியாக இருப்பீர்களாக! (திருக்குர்ஆன்: 2:143)

August 08, 2011

இன்பமோ துன்பமோ எந்த நிகழ்வின் போதும் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைத்தல்!

"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன்: 9:51)

August 07, 2011

நிராகரிக்கும் தந்தை, சகோதரர் குறித்து அல்லாஹ்வின் கட்டளை!

ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன்: 9:23)

நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

August 06, 2011

முந்தைய வேதவாசிகளின் பொய்யானக் கூற்று!

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள். இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும். இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? (அல்குர்ஆன்: 9:30)

நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்பிற்கும் உள்ள வித்தியாசம் ”ஸஹர் உணவு உண்பதுதான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

August 05, 2011

பருவமடைந்த பெண்கள் இஸ்லாத்திற்காக அளிக்க வேண்டிய வாக்குறுதி!

நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லையென்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளைக் கொல்வதில்லை என்றும், கைகள்-கால்கள் (வைத்து) இடையில் அவர்கள் கற்பனை செய்கிற அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான(காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து (எனும் வாக்குறுதி) அளித்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக. மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன் (அல்குர்ஆன்: 60:12)।

ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

August 04, 2011

மனித உள்ளத்தின் பயபக்தியை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டு விடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன், அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான். (அல்குர்ஆன்:53:32)

நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் (என) இரு சந்தோசங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

August 03, 2011

அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்காக மனிதன் எடுத்துக்கொண்ட தெய்வப்பெயர்கள் அனைத்தும் வெறும் பெயர்களே! அதற்கு எந்த சக்தியும் மகத்துவமும் சிறிதேனும் இல்லை!

நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா? அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்। இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை. நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை. நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின்பற்றுகிறார்கள், எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது. (அல்குர்ஆன்:19-23)

சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு ‘அர்ரய்யான்’ என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். ‘நோன்பாளிகள் எங்கே’ என்று அழைக்கப்படும். அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலால் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

August 02, 2011

அல்லாஹ்வின் இந்த வரம்புகளை பேணி பாதுகாப்பவரே பயபக்தியுடையோர்!

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே, இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர், இரவு வரும்வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன்: 2:187)

நோன்பு நோற்றவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

August 01, 2011

நோன்பின் பலனை அறீவீர்களானால்.....

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும். எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (அல்குர்ஆன்: 2:184)

‘நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்’ ஆகவே, நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது. இன்னும் இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் ‘நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி’ என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை, அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)