Pages

April 25, 2010

நீங்கள் எங்கிருந்த போதிலும் (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுடனே இருக்கிறான்

அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. (அல்குர்ஆன்: 6:59)

கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல்குர்ஆன்: 40:19)

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன்: 50:16)

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை. அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 58:7)

அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 57:4)

No comments: