May 31, 2010

முஃமின்களுக்கு நம்பிக்கைக் கொண்டு, பொறுப்பேற்படுத்திக் கொள்ள அல்லாஹ்வே போதுமானவன்!

(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். (அல்குர்ஆன்:3:160)

May 30, 2010

அல்லாஹ்வை நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தவனுக்கு ஏதாவது மீட்சி உண்டா?

எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன்:3:91)

May 29, 2010

மனிதர்களிடம் அல்லாஹ் வாங்கிய உறுதிமொழி!

(நினைவு கூருங்கள்;) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக" (எனக் கூறினான்). "நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?" என்றும் கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் சாட்சியாக இருங்கள்;. நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று கூறினான். (அல்குர்ஆன்:3:81)

May 28, 2010

வறுமை, கஷ்டம், பிணி, துன்பம் அல்லாஹ்வின் சோதனையே!

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப் பட்டார்கள்; "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (அல்குர்ஆன்:2:214)

May 27, 2010

ஈமான் கொண்டவர்களுக்கு அல்லாஹ் முழுமையாக்கி வைக்கும் பிரகாசம்!

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் "எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள். (அல்குர்ஆன்:66:8)

May 26, 2010

அல்லாஹ்வின் ஒளியைப் பெற்றவர்கள் வசிக்கப்போகும் சுவர்க்க சோலைகள்!

அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார், ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக, மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள், அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான். (அல்குர்ஆன்:65:11)

May 25, 2010

அல்லாஹ்வுக்கு அஞ்சி, ஈமான் கொண்டால் கிடைக்கும் ஒளியும், கிருபையும்!

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான், அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள், இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபை உடையவன். (அல்குர்ஆன்:57:28)

May 24, 2010

நயவஞ்சகர்களுக்கு அல்லாஹ் நினைவூட்டும் ஒரு தினம்!

முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: "எங்களை கவனியுங்கள், உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்" என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும், "உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்." பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும், அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும், ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும். (அல்குர்ஆன்:57:13)

May 23, 2010

அல்லாஹ்வின் வேதமும், ஈமானும் மனிதனுக்கு நேர்வழி காட்டும் ஒளி!

(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர். (அல்குர்ஆன்:42:52)

May 22, 2010

பூமி இறைவனுடைய ஒளியால் பிரகாசிக்கும் தீர்ப்பு நாள்!

மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டு வரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்:39:69)

May 21, 2010

அல்லாஹ்வின் நினைவை விட்டும் விலகி, வழிகேட்டிலாகிய கடின இருதயங்கள்.

அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார் (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்:39:22)

May 20, 2010

அல்லாஹ்வின் அருட்கொடைகள் மனிதனின் புறத்திலும், அகத்திலும்!

நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர். (அல்குர்ஆன்:31:20)

May 19, 2010

அல்லாஹ்வின் ஒளி கிடைக்கப் பெறாதவனின் உவமை!

அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. (அல்குர்ஆன்:24:40)

May 18, 2010

அல்லாஹ் தான் நாடியவருக்கு கொடுக்கும் ஈமான் என்னும் ஒளி!

அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது அக் கண்ணாடி ஒளிவீசம் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று. மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளிக்கு மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன். (அல்குர்ஆன்:24:35)

May 17, 2010

அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்!

(நபியே! அவர்களிடம்;) "வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?" என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்; "(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்"; மேலும், கூறும்; "குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!" (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்; "அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்" என்று. (அல்குர்ஆன்:13:16)

May 16, 2010

அறிவுடையோருக்கு அல்லாஹ் விவரிக்கும் அத்தாட்சிகள்!

அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (அல்குர்ஆன்:10:5)

May 15, 2010

முந்தைய வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட இறுதி இறைத்தூதர்!

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,(கடினமான கட்டளைகளையும்) இறக்கி விடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன்:7:157)

May 14, 2010

ஒளியும், இருளும் சமமாகுமா?

மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக் கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன்:6:122)

May 13, 2010

மனித புலன்கள் அல்லாஹ்வின் கைவசமே!

அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அதி(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்று விடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கி விடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன். (அல்குர்ஆன்:2:20)

May 12, 2010

அறிவுடைய சமூகத்திற்கான அத்தாட்சிகள்!

மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்:45:0)

May 11, 2010

இரவும், பகலும் அல்லாஹ்வின் ரஹ்மத்!

இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்; (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்குர்ஆன்:28:73)

May 10, 2010

நிராகரிப்போரின் கூலி!

எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது. அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம். (அல்குர்ஆன்:35:36)

May 09, 2010

சத்தியத்தை நிராகரிப்போருக்கு கடின வேதனை. நம்பிக்கைக் கொண்டோருக்கு....

எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு. (அல்குர்ஆன்:35:7)

May 08, 2010

செல்வங்களும், மக்களும் அல்லாஹ்வின்பால் நம்மை சமீபமாக்கி வைக்குமா?

இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள். (அல்குர்ஆன்:34:37)

May 07, 2010

அல்லாஹ்வை சந்திக்கும் போது கிடைக்கப்போகும் சுபசோபனம்!

(அல்லாஹ்வாகிய) அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் "ஸலாமுன்" (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)" என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்குர்ஆன்:33:44)

May 06, 2010

விசுவாசங் கொண்டோருக்கு அல்லாஹ்வின் ஆணை!

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள்; நீங்கள்(அவருடைய போதனைகளைச் செவியுற்றுக் கொண்டிருக்கும் பொழுதே) அவருடைய கட்டளைக்கு மாறு செய்து அவரை விட்டும் திரும்பி விடாதீர்கள். (அல்குர்ஆன்:8:20)

May 05, 2010

அல்லாஹ்வின் நேசத்தை இழந்தவர்கள் யார்?

ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்:30:45)

May 04, 2010

நற்கூலியை இரட்டிப்பாக்கும் ஜக்காத்!

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள். (அல்குர்ஆன்:30:39)

May 03, 2010

நற்செயல் புரிவோரின் பாக்கியமிக்கக் கூலி!

எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில் நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது. (அல்குர்ஆன்:29:58)

May 02, 2010

அல்லாஹ்விடத்தில் பயபக்தி உடையவரே கண்ணியம் மிக்கவர்!

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" (அல்குர்ஆன்: 49:13)

May 01, 2010

அகிலங்களின் அனைத்துக் காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?

‘உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?’ என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ‘அல்லாஹ்’ என பதிலளிப்பார்கள் ‘அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?’ என்று நீர் கேட்பீராக. (அல்குர்ஆன் 10:31)