January 31, 2011

அல்லாஹ்விடம் நன்மையை நாடி செலவு செய்வதில் நல்ல பொருட்களை தேர்ந்தெடுத்தல்!

அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று. நீர் கூறும்: "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்." (அல்குர்ஆன்: 02:215)

January 30, 2011

அக்கிரமக்காரர்களுடன் மாத்திரமே இஸ்லாமிய போர்!

ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர (வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. (அல்குர்ஆன்: 02:193)

January 29, 2011

புண்ணியச் செயல்கள்!

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல். இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). (அல்குர்ஆன்: 02:177)

January 28, 2011

நாகூர் ஆண்டவரே! யா முஹையத்தீன்! இது போன்ற கூப்பாடுகள் வழிகேடு எனச் சொல்கிறது இந்த இறை வசனம்!

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள். அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்). (அல்குர்ஆன்: 02:165)

January 27, 2011

ஈமானில் உறுதியுள்ள மக்களுக்கு அல்லாஹ்வின் வேத விவரிப்பே போதுமானது!

இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை, மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?" என்று. இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். (அல்குர்ஆன்: 02:118)

January 26, 2011

ஓய்வை கொடுக்கும் உறக்கமும், செல்வ வசதியை ஆகுமான வழிகளில் தேடுவதும் மனிதனுக்கான அத்தாட்சிகளே!

இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும், அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 30:23)

January 25, 2011

அல்லாஹ்வையன்றி வேறொரு இறைவன் இருக்கின்றான் என்று சொல்வது வரம்பு மீறிய சொல்லே!

(இளைஞர்களாகிய) அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று "வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன். எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம். (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்" என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம். (அல்குர்ஆன்: 18:14)

January 24, 2011

கால்நடைகளின் பாலும் அல்லாஹ்வின் அருளே!

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். (அல்குர்ஆன்: 16:66)

January 23, 2011

அல்லாஹ்வையன்றி பொய் தெய்வங்களை வணங்கி, வழிகெடுத்து நரகம் சேருபவர்கள்!

மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி, "இவ்வுலகில் சிறிது காலம்) சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் (இறுதியாகச்) சேருமிடம் நரகம்தான்" என்று நீர் கூறிவிடும். (அல்குர்ஆன்: 14:30)

January 22, 2011

இறைவன் குறித்த நல்லுணர்வு பெற உங்கள் சுற்றுசூழல்களை ஆராயுங்கள்!

(நறுமணமிக்க மரமாகிய) அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான். (அல்குர்ஆன்: 14:25)

January 21, 2011

மனிதனுக்கு அல்லாஹ்வின் சந்திப்பு உறுதி என்பதற்கு அல்லாஹ் கூறும் அத்தாட்சிகள்!

(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான். நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள். பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான். இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான். (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன. அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். (அல்குர்ஆன்: 13:2)

January 20, 2011

அல்லாஹ்வை மறந்திருப்போரே! அவனின் வேதனைக் குறித்த அச்சமில்லையா?

(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்து விடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப் பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா? (அல்குர்ஆன்: 12:107)

January 19, 2011

அல்லாஹ்வின் முடிவுறாத அருட்கொடையாகிய நிலையான சுவனம்!

நற்பாக்கியசாலிகளோ சுவனபதியில் இருப்பார்கள். உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சுவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட்கொடையாகும். (அல்குர்ஆன்: 11:108)

January 18, 2011

தீயவர்களின் இருப்பிடமான நரகத்தின் நிலையான தன்மை!

உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நீடிக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ந்நரகத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள். நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன். (அல்குர்ஆன்: 11:107)

January 17, 2011

நிராகரிப்போரே உங்களுக்கான அல்லாஹ்வின் தவணையை பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

(குஃப்ரின் காரணமாக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய) வேதனையை ஒரு குறித்தகாலம் வரை நாம் பிற்படுத்தினால் "அதைத் தடுத்தது யாது?" என்று அவர்கள் நிச்சயமாக (ஏளனமாகக்) கேட்பார்கள். அவர்களுக்கு வேதனை வரும் நாளில் அவர்களை விட்டும் (அது) தடுக்கப்படாது என்பதையும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன்: 11:8)

January 16, 2011

ஈமான் கொண்டவர்கள் மீதான அல்லாஹ்வின் கடமை!

(உலக வாழ்க்கையில் அவ்வாறு வேதனை வருங்காலத்தில்) நம் தூதர்களையும், ஈமான் கொண்டவர்களையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம் - (ஏனெனில்) ஈமான் கொண்டவர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும். (அல்குர்ஆன்: 10:103)

January 15, 2011

அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாத மக்களுக்கு இவ்வுலகில் இழிவுமிக்க வேதனை நிச்சயமே!

தங்களுடைய ஈமான் பலனளிக்குமாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம். அன்றி, சிறிது காலம் சுகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம். (அல்குர்ஆன்: 10:98)

January 14, 2011

தான் நாடியதை செய்து கொள்ள அல்லாஹ்வின் தூதர்களுக்கு அதிகாரம் உண்டா?

(நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை. ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு. அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்." (அல்குர்ஆன்: 10:49)

January 13, 2011

அல்லாஹ்வை மறந்த மனிதனின் ஆணவ எண்ணமே அவன் அழிவுக்கு காரணமாகிறது!

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் நீரைப் போன்றது. (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றனர். முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள் (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கி விட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம். (அல்குர்ஆன்: 10:24)

January 12, 2011

மனிதன் அவசரக்காரன், அல்லாஹ்வோ கிருபையாளன்!

நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும். எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம். (அல்குர்ஆன்: 10:11)

January 11, 2011

நம்பிக்கைக் கொண்ட இருதயங்கள் அஞ்சி நடுங்க வேண்டிய இறுதி இறை வேதம்!

ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர். (அல்குர்ஆன்: 57:16)

January 10, 2011

மறுமையை நம்பாதவர்களின் அறிவற்ற, கற்பனையான கூற்று!

மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்; "நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; "காலம்" தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை" என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 45:24)

January 09, 2011

துன்பத்தின் போது அல்லாஹ்வை அழைத்தவன் இன்பத்தின் போது மமதைக் கொள்கிறான் நன்றி மறந்து!

இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான். பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக "உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே." (அல்குர்ஆன்: 39:8)

January 08, 2011

படைப்பாளன் தன் படைப்புகளிடம் கொண்ட கிருபையின் வெளிப்பாடு!

அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான். உங்கள் பிரயாண நாட்களிலும் (ஊரில்) நீங்கள் தங்கும் நாட்களிலும் (பயன்படுத்த) உங்களுக்கு எளிதாக இருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் தோல்களிலிருந்தும் வீடுகளை உங்களுக்கு ஆக்கினான். வெள்ளாட்டின் உரோமங்கள் ஒட்டகையின் உரோமங்கள், செம்மறியாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்தும் உங்களுக்கு ஆடைகளையும் குறிப்பிட்ட காலம்வரை (அவற்றில்) சுகத்தையும் அமைத்துத் தந்திருக்கிறான். (அல்குர்ஆன்: 16:80)

January 07, 2011

நாளை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ளப்போகும் முறையான தொழுகை, ஜகாத்தின் நன்மைகள்!

இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும். ஜகாத் கொடுத்தும் வாருங்கள். ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன்: 2:110)

January 06, 2011

ஈமானை குஃப்ரைக் கொண்டு மாற்றும் செயல் இது!

இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை 'குஃப்ரினால்' மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறி விட்டான். (அல்குர்ஆன்: 2:108)

January 05, 2011

குர்ஆனாகிய இவ்வேதத்தை நிராகரிப்போர் யார்?

(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம். பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:99)

January 04, 2011

விசாலமான அல்லாஹ்வின் அருள்!

''இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) நற்குணமுள்ள உங்கள் ஆண்,பெண் அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் செல்வந்தர்களாக ஆக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.'' (அல்குர்ஆன்: 24:32)

January 03, 2011

நல்லொழுக்கமுடைய பெண்களின் நற்செயல்கள்!

''நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மாரிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். தங்கள் கணவன் இல்லாத சமயத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவற்றை அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு பாதுகாத்துக் கொள்வார்கள்.'' (அல்குர்ஆன்: 4:34)

January 02, 2011

மனித வாழ்வின் கால அளவு !

(அல்லாஹ்வாகிய) அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக அவர்கள் எண்ணுவார்கள். அப்போது தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள். மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை. (அல்குர்ஆன்: 10:45)

January 01, 2011

கால கணக்கை அறிவதற்கு மிக அவசியமான சூரியனும், சந்திரனும்!

அவனே பொழுது விடியச் செய்பவன். (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். (அல்குர்ஆன்: 6:96)

அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (அல்குர்ஆன்: 10:5)

அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான். இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகயெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. (அல்குர்ஆன்: 35:13)