Pages

April 30, 2010

அல்லாஹ் பட்டியலிடும் அழகிய நற்செயல்கள்!

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்குர்ஆன்:33:35)

April 29, 2010

ஒரு இறை விசுவாசிக்கு உரிமை இல்லாத விஷயம்!

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்ராயம் கொள்வதற்க்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்த பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகேடாக திட்டமாக வழி கெட்டுவிட்டார். (அல்குர்ஆன்:33:36)

April 28, 2010

அல்லாஹ்வை நம்பினால் மட்டுமே நேர்வழி அடைய முடியும்!

"(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்: 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கின்றேன், அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" (என்று கூறுவீராக.) (அல்குர்ஆன்: 2:186)

April 27, 2010

நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பவன்!

'என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன். மிக்க கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக." (அல்குர்ஆன்: 39:53)

April 26, 2010

அல்லாஹ்வைக் காண முடியுமா?

பார்வைகள் அவனை அடைய முடியா, ஆனால் அவனோ எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன்: 6:103)

April 25, 2010

நீங்கள் எங்கிருந்த போதிலும் (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுடனே இருக்கிறான்

அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. (அல்குர்ஆன்: 6:59)

கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல்குர்ஆன்: 40:19)

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன்: 50:16)

நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை. அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 58:7)

அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 57:4)

April 24, 2010

கட்டாயத் திருமணம் அனுமதி இல்லை!

'நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை. அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்! அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்' (அல்குர்ஆன் 4:19)

April 23, 2010

மாதவிடாயும், அல்லாஹ்வின் கட்டளையும்!

'(நபியே!) உம்மிடம் மாதவிடாய் பற்றி அவர்கள் கேட்கின்றனர். 'அது ஓர் தொல்லையாகும். மாதவிடாயின் போது பெண்களிடமிருந்து (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை (உடலுறவுக்காக) அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள், நிச்சயமாக அல்லாஹ் திருந்துவோரை விரும்புகிறான், தூய்மையானவர்களையும் விரும்புகிறான்' என்று (நபியே!) கூறுவீராக'. (அல்குர்ஆன் 2:222)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் யூத சமுதாயத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றுவார்கள். உண்ணும் போதும் பருகும் போதும் தம்முடன் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டிலும் சேர்க்க மாட்டார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளினான். இவ்வசனம் அருளப்பட்ட பின் உடலுறவு தவிர மற்ற அனைத்தையும் செய்யுங்கள்! வீடுகளில் அவர்ளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: அபூதாவூது

April 22, 2010

இணை வைப்பவர்களின் அழைப்பும் - அல்லாஹ்வின் அழைப்பும்!

'இறைவனுக்கு இணைவைக்கும் பெண்ணை - அவர்கள் ஈமான் கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள்! இறை நம்பிக்கையுடைய அடிமைப் பெண் (அடிமையல்லாத) இணைவைக்கும் பெண்ணை விடச் சிறந்தவள். அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! உங்கள் பெண்களை இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் ஈமான் கொள்ளும் வரை - மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இறைநம்பிக்கையுடைய அடிமையான ஆண் (அடிமையில்லாத) இணைவைக்கக் கூடிய ஆணைவிடச் சிறந்தவன். அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! (இணை வைக்கும்) அவர்கள் நரகத்தின் பால் உங்களை அழைக்கின்றனர். அல்லாஹ்வோ தனது உத்தரவின் மூலம் மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின் பாலும் அழைக்கிறான். அல்லாஹ் தனது வசனங்களை மக்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவுபடுத்துகிறான்'. (அல்குர்ஆன் 2:221)

April 21, 2010

நான்கு மத்ஹபைப் பின்பற்றாதவர்கள் பள்ளியில் தொழவோ, தொழ வைக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று அறிவிப்புப் பலகையை வைத்தவர்கள் படிக்க வேண்டிய வசனம்!

'இன்னும் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனின்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் இழிவு உண்டு. மறுமையிலும் இவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு.' (அல்குர்ஆன் 2:114)

April 20, 2010

மனிதன் அச்சம் கொள்ள வேண்டிய ஒரு நாள்!

'எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் எதனையும் செய்து விட முடியாத எந்த ஆத்மாவிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத உதவியும் செய்யப்படாத ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.' (அல்குர்ஆன் 2:48)

April 19, 2010

வேதத்தை வியாபாரமாக்குதல்.

உங்களிடமிருப்பதை (வேதத்தை) உண்மைப் படுத்தும் விதமாக (அல்லாஹ்வாகிய) நான் அருளியதை (குர்ஆனை) நம்புங்கள்! அதை மறுப்பவர்களில் முதன்மையானவராக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! எனது வசனங்களை அற்பக்கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! என்னையே அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:41)

April 18, 2010

அல்லாஹ்வையன்றி மனிதன் வணக்கத்திற்கென எடுத்துக் கொண்டவைகள், அவனை நிராகரிக்கும் ஒரு நாள்!

(குற்றவாளிகளான) அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) "என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?" என்று (இறைவன்) கேட்பான். (அதற்கு) அவர்கள் "இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்" என்று கூறுவர். (அல்குர்ஆன்: 25:17-18)

April 17, 2010

அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் காஃபிர்களிடையே குர் ஆனைக் கொண்டு போராடுதல்!

ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர். இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக. (அல்குர்ஆன்: 25:52)

April 16, 2010

அல்லாஹ்வுக்கு இணை வைக்காத தூயவர்களுக்கான மலக்குகளின் முகமன்!

(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்; "ஸலாமுன் அலைக்கும்' ("உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்" என்று அம்மலக்குகள் சொல்வார்கள். (அல்குர்ஆன்: 16:32)

April 15, 2010

சத்தியமாகிய அல்குர்ஆனை நிராகரித்தால்...

(நபியே!) சொல்வீராக "உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான் ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்." (அல்குர்ஆன்: 25:77)

April 14, 2010

மூடர்களுக்காக பிரார்த்திக்கும் அர்ரஹ்மானின் அடியார்கள்!

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் "ஸலாம்" (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (அல்குர்ஆன்: 25:63)

April 13, 2010

அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்கள் பெறப்போகும் கூலி கழுத்தில் விலங்கிடுதல்!

அதற்கு பலஹீனர்களாகக் கருதப் பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், "அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்" என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா? (அல்குர்ஆன்: 34:33)

April 12, 2010

தங்களுடைய நற்கூலியை இரட்டிப்பாக்கிக் கொண்ட நன்மக்கள்!

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள். (அல்குர்ஆன்: 30:39)

April 11, 2010

அல்லாஹ்வை, அவனின் தூதர்களை நம்ப மறுப்பவர்கள் அறிவற்ற சமூகத்தவர்களே!

"அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற்காக (அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை; எனவே ஈமான் கொண்டவர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பினும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக்கின்றனர்; ஆனால் உங்களையே அறிவில்லா சமூகத்தவர்களாகவே நான் காண்கிறேன். (அல்குர்ஆன்: 11:29)

April 10, 2010

மனிதர்களிடையே நன்மையை ஏவி, கூலியை அல்லாஹ்விடம் எதிர்பார்த்தல்!

"ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்" (என்று கூறினார். (அல்குர்ஆன்: 10:72)

April 09, 2010

இருண்ட முகங்களை உடைய நரக நெருப்புக்குரியவர்கள்

ஆனால் தீமையைச் சம்பாதிப்பவர்களுக்கு, (அவர்கள் செய்த) தீமைக்குக் கூலியாக அதுபோன்ற தீமையாகும்! அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும்; அவர்களை அல்லாஹ்வின் (தண்டனையை) விட்டுக் காப்பாற்றுபவர் எவருமிலர்; இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சுற்றிக் கொள்ளப்பட்டது போல் (அவர்களின்) முகங்கள் காணப்படும். அவர்கள் நரக நெருப்புக்கு உரியவர்கள். அவர்கள் அங்கேயே என்றென்றும் இருப்பார்கள். (அல்குர்ஆன்: 10:27)

April 08, 2010

அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சிகளை நம்ப மறுத்தால்...?

(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம். (அல்குர்ஆன்: 10:13)

April 07, 2010

அல்லாஹ்வின் மெய்யான வாக்குறுதி!

நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீ;ண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்: 10:04)

April 06, 2010

அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நற்கருமங்களே!

மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:120)

April 05, 2010

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் கூலியில் அவனுடைய கருணையே அதிகம்!

எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 6:160)

April 04, 2010

அல்லாஹ்வை நம்ப மறுத்த பொய்யனின் இவ்வுலக நற்கருமங்களின் இறுதி நிலை என்ன?

எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்? (அல்குர்ஆன்: 7:147)

April 03, 2010

அல்லாஹ்வின் வேத வசனங்களை புறக்கணித்த அநியாயக்காரன் பெறப்போகும் கொடிய வேதனை!

அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்); ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்து விட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகி விடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டு விலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம். (அல்குர்ஆன்: 6:157)

April 02, 2010

அல்லாஹ்வின் மீதான மனிதனின் பொய்க் கற்பனைகள்!

இன்னும் அவர்கள் (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) "ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது" என்று கூறுகின்றனர்; மேலும் சில கால்நடைகளைச் சவாரி செய்யவும், சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும்; இன்னும் சில கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறக் கூடாதென்றும்; அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களுடைய பொய்க் கூற்றுகளுக்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான். மேலும் அவர்கள், "இந்தக் கால் நடைகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன - அவை செத்துப் பிறந்தால், அவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு" என்றும் கூறுகிறார்கள்; அவர்களுடைய (இந்தப் பொய்யான) கூற்றுக்கு அவன் தக்க கூலி கொடுப்பான் - நிச்சயமாக அவன் பூரண ஞானமுடையோனும், (யாவற்றையும்) அநிந்தவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 6:138,139)

April 01, 2010

தர்மம், நன்மை, சமாதானம்!

(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம். (அல்குர்ஆன்: 4:114)