July 31, 2010
உலக நிகழ்வுகள் எல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே!
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை, மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 64:11)
July 30, 2010
உலக வாழ்வில் தீயோராக இருந்தோர் நஷ்டப்படும் நாள்!
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும், ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான். அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும். (அல்குர்ஆன்: 64:9)
July 29, 2010
நிராகரிக்கும் மனிதனைத் தவிர்த்து அனைத்தும் அல்லாஹ்வை துதி செய்கின்றன!
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன, அவனுக்கே ஆட்சி உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே, அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன்: 64:1)
July 28, 2010
நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் ஆற்றியோரின் நிரந்தர வாழுமிடம்!
(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (அல்குர்ஆன்: 2:25)
July 27, 2010
வீண் செலவு செய்து உலக இன்பம் தேடியவர்களின் கூலி!
அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், "உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், "ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்). (அல்குர்ஆன்: 46:20)
July 26, 2010
அல்லாஹ்வின் வரம்புகளை மீறும் மனிதனின் அலட்சியம்!
மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்ககாதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. (அல்குர்ஆன்: 10:12)
July 25, 2010
பெண்களின் உரிமைகள்!
நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள். இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். (அல்குர்ஆன்: 4:19)
July 24, 2010
அல்லாஹ் விதித்த வரம்பை மீறுபவர்களுக்கு அவன் வழங்கும் துன்பத்தின் வகைகள்
(நபியே!) நீர் கூறும்; "உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்." அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (அல்குர்ஆன்: 6:65)
July 23, 2010
பாவமன்னிப்பிற்கு அருகதையற்ற ஆன்மாக்கள்!
இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கியபோது, "நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்" என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன்: 4:18)
July 22, 2010
பொறுமையுடையோர் துன்பத்தின் போது சொல்ல வேண்டிய சொல்! (إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ)
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 2:156)
July 21, 2010
மனிதனுக்கு பெறும் நஷ்டத்தை ஏற்படுத்தும் அல்லாஹ்வின் விரோதி!
"இன்னும் நிச்சயமாக நான் (மனிதர்களாகிய)அவர்களை வழி கெடுப்பேன் அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்। (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்" என்றும் ஷைத்தான் கூறினான். எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான். (அல்குர்ஆன்: 4:119)
July 20, 2010
கடனும், அதன் மீதான கடமைகளும்!
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும். எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும். அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள். இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;. எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர, அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (அல்குர்ஆன்: 2:282)
July 19, 2010
நிராகரிப்போர் கால்நடைகளைப் போன்றோரே!
அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள். அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:171)
July 18, 2010
அல்லாஹ்வின் இறுதி வேதமும், அச்சமுள்ள மனதின் நடுக்கமும்!
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர். (அல்குர்ஆன்: 57:16)
July 17, 2010
மறுமையை நம்பாத, அறிவற்றவர்களின் காலம் பற்றிய கணிப்பீடு!
மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்; "நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது. நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; "காலம்" தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை" என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 45:24)
July 16, 2010
படைப்பாளானாகிய அல்லாஹ் தன் படைப்புகள் குறித்து கூறும் அழகிய விவரிப்பு!
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. (அல்குர்ஆன்: 22:5)
July 15, 2010
கால்நடைகளிலிருந்து இறை அருளால் மனிதன் பெறும் சுகானுபவங்கள்!
அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான்; உங்கள் பிரயாண நாட்களிலும் (ஊரில்) நீங்கள் தங்கும் நாட்களிலும் (பயன்படுத்த) உங்களுக்கு எளிதாக இருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் தோல்களிலிருந்தும் வீடுகளை உங்களுக்கு ஆக்கினான். வெள்ளாட்டின் உரோமங்கள் ஒட்டகையின் உரோமங்கள், செம்மறியாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்தும் உங்களுக்கு ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை (அவற்றில்) சுகத்தையும் அமைத்துத் தந்திருக்கிறான். (அல்குர்ஆன்: 16:80)
July 14, 2010
அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்வதால், இம்மையின் வேதனை அகற்றப்படுதலும், உலக சுகம் அனுபவித்தலும்!
தங்களுடைய ஈமான் பலனளிக்குமாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி, சிறிது காலம் சுகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம். (அல்குர்ஆன்: 10:98)
July 13, 2010
அல்லாஹ்வை நிராகரிப்பவன் அனுபவிக்கும் சிறிது உலக சுகானுபவம்! பிறகு?
(இன்னும் நினைவு கூறுங்கள்;) இப்ராஹீம்; "இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக" என்று கூறினார். அதற்கு இறைவன் கூறினான்; "(ஆம்) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்" பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே." (அல்குர்ஆன்: 2:126)
July 12, 2010
வழிகேட்டிலான மக்களின் கால அவகாசம்!
நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்; எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம். (அல்குர்ஆன்:10:11)
July 11, 2010
பிரயோசனமற்ற, காலம் கடந்த ஞானம்!
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!" என்று கூறுவான்। "நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்)। அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது। (அல்குர்ஆன்: 23:99-100)
July 10, 2010
மஸ்ஜிதுல் ஹராமில் இணைவைப்பு எனும் அநியாயம் செய்தால்....
நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம். (அல்குர்ஆன்: 22:25)
July 09, 2010
அல்லாஹ்வால் மதிக்கப்படக்கூடிய முஃமின்களின் முயற்சி!
யார் மறுமையை விரும்புகிறாரோ - இறைநம்பிக்கை கொண்டவராகவும் இருந்து அதற்காகப் பாடுபடுகிற முறைப்படி பாடுபடுகிறாரோ அத்தகைய ஒவ்வொருவரின் முயற்சியும் மதிக்கப்படக்கூடியதாகவே இருக்கும்' (அல்குர்ஆன்: 17:19)
July 08, 2010
உள்ளத்தின் இரகசியங்கள் சோதனையிடப்படும் நாளில் மனிதனின் நிலை!
'திண்ணமாக (இறைவனாகிய) அவன் மனிதனை மீண்டும் படைப்பதற்கு ஆற்றலுள்ளவனாக இருக்கிறான்। எந்நாளில் உள்ளத்தின் இரகசியங்களெல்லாம் சோதனையிடப்படுமோ அந்நாளில் மனிதனிடம் எந்த சுயவலிமையும் இருக்காது அவனுக்குத் துணைபுரிபவர் எவரும் இருக்கமாட்டார்! (அல்குர்ஆன்: 86 : 8, 11)
July 07, 2010
செம்மையான மார்க்கமான இஸ்லாத்தின் இறைக் கட்டளைகள்!
'மேலும் தங்களது கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கியவர்களாகவும் ஓர்மனப்பட்டவர்களாகவும் அல்லாஹ்வை அவர்கள் வணங்கி வழிபட வேண்டும்। தொழுகையையும் நிலைநாட்ட வேண்டும்। ஜகாத்தும் கொடுக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை। இதுவே சீரான - செம்மையான மார்க்கமாகும்' (அல்குர்ஆன்: 98:5)
July 06, 2010
அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட கல்வி ஞானத்திற்கு நன்றி செலுத்துதல்!
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்; "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்" என்று கூறினார்கள். (அல்குர்ஆன்: 27:15)
July 05, 2010
விக்கிரக வணக்கம் ஒரு அசுத்தமே!
இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன ஆகவே விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 22:30)
July 04, 2010
அல்லாஹ்விடத்தில் மேன்மை மிக்க பொறுமை!
(முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும். (அல்குர்ஆன்: 16:126)
July 03, 2010
உணர்ந்தறியும் மக்களுக்கான அல்லாஹ்வின் அத்தாட்சிகள்!
இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாடசிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 13:04)
July 02, 2010
நல்லொழுக்கமுள்ள பெண்களின் அழகிய பண்புகள்!
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான்। (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள். எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:34)
July 01, 2010
அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்!
மேலும் எதன் முலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி இருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு. எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:32)
Subscribe to:
Posts (Atom)




