May 30, 2011

அல்லாஹ்வுக்கு அச்சம் கொள்ளாத ஆணவக்காரனின் தங்குமிடம்!

(நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கிறான். உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான். அவன் (உம்மை விட்டுத்) திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான். விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான். கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. "அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும். (அல்குர்ஆன்: 2:204,205,206)

May 29, 2011

இஸ்லாமிய எதிரிகளை எதிர்ப்பதில் வரம்பு மீறாதிருத்தல்!ர்

உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்: 2:190)

May 28, 2011

நேர்வழி அடைய அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தித்தல்!

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. (அல்குர்ஆன்: 2:186)

May 27, 2011

கொலையும், கொலை சார்ந்த அல்லாஹ்வின் கட்டளையும்!

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்டஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும். ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு. நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு. (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (அல்குர்ஆன்: 2:178-179)

May 26, 2011

நற்செயல்கள் என்பது எது?

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல். இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்). இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள். இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (அல்குர்ஆன்: 2:177)

May 25, 2011

கைசேதமே! உலக வாழ்வில் நான் மலையென நம்பியிருந்த அவ்லியாக்களும், நாதாக்களும் எங்கே சென்றார்கள்!

(அல்லாஹ்வின் நேசிப்பை விட்டு மற்றவர்களை அல்லாஹ்வின் நேசிப்பிற்கொப்ப நேசித்தவர்கள் இணைவைப்பு எனும் இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள். இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும். (அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: "நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்." இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான். அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர். (அல்குர்ஆன்: 2:166-167)

May 24, 2011

ஷைகு, அவ்லியா, வலிமார்களின் நேசிப்பையும், அவர்களிடம் இறைஞ்சி கேட்டு இணை வைப்பதையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள். இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள். அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்). (அல்குர்ஆன்: 2:165)

May 23, 2011

நிராகரிப்போராகவே மரணமடைபவருக்கான பரிபூரண சாபம்!

யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்। அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்। அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது. மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது. (அல்குர்ஆன்: 2:161-162)

May 22, 2011

அல்லாஹ்வின் வேதத்தில் எதையேனும் மறைத்து பெரும் சாபத்தை பெறாதீர்!

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (அல்குர்ஆன்: 2:159)

May 21, 2011

இறைத்தூதரின் சமூகப் பணிகள்!

இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன்: 2:151)

May 20, 2011

இஸ்லாத்தைப் புறக்கணிப்பவர் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்கிறார்!

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? - தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர. நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார். (அல்குர்ஆன்: 2:130)

May 19, 2011

அல்லாஹ்வின் வழி இஸ்லாம்! அதுவே நேர்வழி!!

(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) "நிச்சயமாக அல்லாஹ்வின் வழி - (இஸ்லாம்) அதுவே நேர்வழி" என்று சொல்லும். அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (அல்குர்ஆன்: 2:120)

May 18, 2011

அல்லாஹ்வையோ வேதத்தையோ அறியாதவர்களின் அர்த்தமற்ற கூற்று!

இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்: "அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை, மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?" என்று. இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். (அல்குர்ஆன்: 2:118)

May 17, 2011

இவருக்கு இவ்வுலக வாழ்விலோ இழிவு, மறுமையிலோ கடும் வேதனை! யார் அவர்! எச்சரிக்கை!

இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்: 2:114)

May 16, 2011

மறுமை பாக்கியங்களை சிதறடிக்கும் சூனியம்!

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள். இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக் கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகி விடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன்: 2:102)

May 15, 2011

யூதர்கள், கிறிஸ்தவர்களின் வீணான ஆசை!

"யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். இது அவர்களின் வீணாசையேயாகும்; "நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக! அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:111-112)

May 14, 2011

வழிகாட்டி, நன்மாராயம், அல்குர்ஆன்!

யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும். நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார். அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன்: 2:97)

May 13, 2011

யூதர்களின் பேராசை!

(யூதர்களாகிய)அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன்: 2:96)

May 11, 2011

சனிக்கிழமையை விடுமுறை நாளாகக் கொண்ட யூதர்கள், இறை வரம்பை மீறி தனக்குத்தானே அநீதி இழைத்தனர்!

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம். இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும், பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன்: 2:65-66)

May 10, 2011

மரணத்திற்குப்பின் வரக்கூடிய இந்த நாளை பயந்து, உலகில் வாழக்கூடிய நாட்களை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளல்!

இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:48)

May 09, 2011

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்?

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டு வரப்படுவீர்கள். அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான். அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2:28:29)

May 08, 2011

மனிதர்களையும், மனிதன் வணங்கி, வழிபட்ட கல்லாலான சிலைகளையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பு!

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள்.(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன்: 2:23-24)

May 07, 2011

இறை வல்லமையின் உண்மைகளை அறிந்து கொண்டே பொய்யின் பக்கம் செல்லாதீர்!

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான். (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன்: 2:21-22)

May 06, 2011

வழிகேட்டில் தட்டழிந்து திரியும் போலி விசுவாசிகளை அல்லாஹ் பரிகசிக்கிறான்!

இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள். அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான். (அல்குர்ஆன்: 2:14-15)

May 05, 2011

தம் மடமையை அறியா மூடர்கள்!

(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று (பூமியில் குழப்பத்தை உண்டுபண்ணும்) அவர்களிடம் சொல்லப்பட்டால், ´மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?´ என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள்। ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை. (அல்குர்ஆன்: 2:13)

May 04, 2011

சத்தியத்தை முறித்து விட்டால் அதற்கான பரிகாரம் என்ன?

சத்தியத்தின் பரிகாரமாவது, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து வரும் ஆகாரத்தில் நடுத்தரமானதை - பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இதற்கான வசதியை ஒருவன் பெற்றிருக்காவிட்டால், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்யும்பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக்காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகின்றான். (அல்குர்ஆன்: 5:89)

May 03, 2011

சத்தியத்தில் மனிதன் மீது அல்லாஹ்வின் கருணை!

அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சிலபோது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான். மேலும், அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும் அவன் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்: 66:2)

May 02, 2011

அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்தலில் நன்மையை நாடுதல்!

இன்னும் நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால் நீங்கள் நற்கருமங்கள் செய்தல் இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாக செய்து விடாதீர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 2:224)

May 01, 2011

அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியத்தை உறுதிபடுத்திய பின்னர் அதை முறிக்காதிருத்தல்!

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து, அதனை உறுதிப்படுத்திய பின்னர் அச்சத்தியத்தை முறிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான். நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் விசயத்தில் நூலை நூற்று நன்கு முறுக்கேறிய பின் அதை துண்டு துண்டாக்கிவிடும் (மதிகெட்ட) பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள். (அல்குர்ஆன்:16:91,92)