Pages

February 28, 2011

நடுநிலையான மனதுடன் குர்ஆன் எனும் இவ்வேதத்தை சிந்தித்தல்!

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (அல்குர்ஆன்: 47:24)

February 27, 2011

சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் அல்லாஹ்வால் அருளப்பெற்ற வேதம்!

இது பாக்கியம் நிறைந்த வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் (நபியே) உமக்கு அருளினோம். (அல்குர்ஆன்: 38:29)

February 26, 2011

அல்லாஹ் அருளிய வேதத்தில்...

“உங்களிடம் ஒரு வேதத்தை அருளினோம். அதில் உங்களுக்கு ‘அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா? (அல்குர்ஆன்: 21:10)

February 25, 2011

அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட மக்கா மாநகர்!

"(மக்காவாகிய) இந்த ஊரை எவன் கண்ணியப் படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன. அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்" (என்று நபியே! நீர் கூறுவீராக). (அல்குர்ஆன்: 27:91)

February 24, 2011

உண்மை இறைவனாகிய அல்லாஹ்வின் செயல் திறன்!

இன்னும் நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர். (எனினும் இறுதி நாளாகிய அந்நாளில்) அவை மேகங்களைப் போல் பறந்தோடும். ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயல்திறனாலேயே (அவ்வாறு நிகழும்।) நிச்சயமாக, அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன். (அல்குர்ஆன்: 27:88)

February 23, 2011

இறப்புக்கு பின் உள்ள மறுமை வாழ்வைப் பற்றி அறியாதவர் கண்ணிருந்தும் குருடரே!

ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது. அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர். அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன்: 27:66)

February 22, 2011

அல்லாஹ்வுடன் வேறு கடவுளர்கள் இருக்கின்றனரா? இல்லவே இல்லை!

முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்." (அல்குர்ஆன்: 27:64)

February 21, 2011

குளிர்ந்த காற்றைக் கொண்டு மழையைப் பொழியச் செய்பவன் யார்?

கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய 'ரஹ்மத்' என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன். (அல்குர்ஆன்: 27:63)

February 20, 2011

கஷ்டத்தில் துவழ்பவன் கடவுளே என அழைத்தால், அவன் துயரை நீக்கி, அருள் புரிபவன் யார்?

கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவேயாகும். (அல்குர்ஆன்: 27:62)

February 19, 2011

உயிரினங்கள் வசிக்கத்தக்க இடமாக பூமியை ஆக்கியவன் யார்?

இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன்: 27:61)

February 18, 2011

வானங்களையும், பூமியையும் படைத்து, பூமியில் செழிப்பை உண்டாக்குபவன் யார்?

அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 27:60)

February 17, 2011

அல்லாஹ்வே மிக்க மேலானவன்!

(நபியே!) நீர் கூறுவீராக "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?" (அல்குர்ஆன்: 27:59)

February 16, 2011

அநியாயம் செய்து அழிந்த ஸமூது கூட்டத்தினரின் இன்றைய அத்தாட்சிகள்!

ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன. நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன்: 27:५२)




February 15, 2011

சூரியனை வணங்குவது அநியாயச் செயலே!

"(அரசியாகிய)அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்। அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான். ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை. (அல்குர்ஆன்: 27:24)

February 14, 2011

மனிதனுக்கு தனது தீய செயல்கள் அழகாக தோன்ற காரணம் இந்த நம்பிக்கை இல்லாததே!

நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம். எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள். அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு. மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடைபவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 27:4-5)

February 13, 2011

தமக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு பழி தீர்த்தல்!

ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்) அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 26:227)

February 12, 2011

அல்லாஹ்வால் இறக்கப்பட்ட அனைத்து வேதங்களையும் நம்புதல் வேண்டும்!

விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்னுடைய தூதர் மீது இறக்கி வைத்த இவ்வேதத்தையும், (இதற்கு) முன்னர் இறங்கிய வேதத்தையும் விசுவாசியுங்கள்।” (அந்நிஸா: 136)

February 11, 2011

தம் முன்னோர்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை மறந்த யூத சமுதாயம்!

”இதையே இப்ராஹீம் தன் சந்ததிகளுக்கு அறிவுறுத்தினார். யஃகூபும் (இவ்வாறே உபதேசம் செய்தார்) என் மக்களே! நிச்சயமாக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தை உங்களுக்காகவே தேர்ந்தெடுத்துள்ளான். ஆகவே நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம். அல்லது யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (யூதர்களே அவரருகில்) நீங்கள் இருந்தீர்களா? அவர் தம் மைந்தர்களிடம், எனக்குப் பிறகு நீங்கள் எதனை வணங்குவீர்கள்? எனக் கேட்டதற்கு, உம்முடைய வணக்கத்திற்குரியவனும், உம்முடைய மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் வணக்கத்திற்குரியவனுமாகிய ஒரே ஒரு இறைவனையே வணங்குவோம். அவனுக்கே முற்றிலும் கீழ்படிந்தவர்களாகவும் இருப்போம் என்று கூறினார்கள்.” (அல்பகரா: 132-133)

February 10, 2011

மனிதனின் உபகாரம் பாரபட்சமின்றி அனைவருக்குமானதாக இருத்தல் வேண்டும்!

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்: 04:36)

February 09, 2011

கணவன் மனைவியாகிய அவர்கள் உண்மையிலேயே சமாதானத்தை விரும்பினால் ஒற்றுமையை அல்லாஹ் ஏற்படுத்துவான்!

(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால், கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள். அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும்படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 04:35)

February 08, 2011

அல்லாஹ் குறிப்பிடும் இந்த நேரத்தில் நிலை தடுமாறாமல் நடந்து இருக்கிறோமா?

பாகப்பிரிவினை செய்யும்போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள். மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். (அல்குர்ஆன்: 04:08)

February 07, 2011

எப்பொழுதும் இறைக் கண்காணிப்பில் இருக்கும் மனிதன்!

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 04:01)

February 06, 2011

அல்லாஹ்வின் வேதத்தை எது ஒன்றையும் மறைக்காமல் மக்களுக்கு தெளிவு படுத்துதல்!

தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக). அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு, அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன்: 03:187)

February 05, 2011

முந்தைய வேதத்தையுடையோரிடமும், பாமர மக்களிடமும் இறை வசனங்களைக் கொண்டு நினைவுறுத்தல்!

(இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக "நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன். என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)" தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும், "நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?" என்று கேளும். அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும். மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக் கவனிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 03:20)

February 04, 2011

குர்ஆனாகிய இவ்வேதத்தை நம்பிக்கைக் கொண்டு, நல்லுபதேசம் பெறுபவரே அறிவுடையோர் ஆவர்!

அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (அல்குர்ஆன்: 03:07)

February 03, 2011

அல்லாஹ்வின் பாதையில் தனது செல்வத்தை செலவிடுபவர்களுக்கு அல்லாஹ்வின் அழகிய உவமை!

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெரு மழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 02:265)

February 02, 2011

மிக உயர்ந்தவனாகிய, மகிமை மிக்க அல்லாஹ்வின் பண்புகள்!

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன், அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல்குர்ஆன்: 02:255)

February 01, 2011

அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிபடுபவர்கள் யார் என்பதற்கான அவனின் சோதனை!

பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது அவர்; "நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான். யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர். தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்" என்று கூறினார். அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள். பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) "ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை" என்று கூறிவிட்டனர். ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், "எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறினார்கள். (அல்குர்ஆன்: 02:249)