October 31, 2009

அல்லாஹ்வின் கட்டளை!

''மேலும் (நினைவு கூருங்கள்:) நாம் (கஅபா எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒன்று கூடும் இடமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், 'இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக் கொள்ளுங்கள்' என்றும் மக்களுக்கு நாம் கட்டளையிட்டோம்'' (திருக்குர்ஆன்: 02:125)

October 30, 2009

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் கேள்வி!

அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் - இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன். (திருக்குர்ஆன்: 30:40)

October 27, 2009

பயபக்திக்கு மிக நெருக்கமான நீதி!

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 5:8)

October 26, 2009

உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு விலக்கப்பட்டவற்றைப் புசித்து விட்டால்...

(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும். இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன். ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 5:3)

October 25, 2009

நல்லுணர்வற்ற, பயமற்ற, சுய அறிவை இழந்த அக்கிரமக்காரர்கள்.

"(நபியே! நீர் அவர்களை நோக்கி) பூமியும் அதிலுள்ளவைகளும் யாருடையன என நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள் எனக் கேட்டால், அதற்கவர்கள் 'அல்லாஹ்வுக்குடையனவே' எனக் கூறுவார்கள். (அவ்வாறாயின்) இதன் மூலம் நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா? என்று கூறும். (அன்றி) ஏழு வானங்களுக்கு இறைவனும், மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்? எனக் கேட்பீராக! அதற்கவர்கள் யாவும் 'அல்லாஹ்வுக்குடையனவே' என்று கூறுவார்கள். (அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா? என்று கூறும். அன்றி சகல பொருட்களின் அதிகாரம் யார் கையில் இருக்கிறது? யாராலும் இரட்சிக்கப்படாதவனும், (எல்லோரையும்) இரட்சிக்கக்கூடியவனும் யார்? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள் எனக் கூறும். அதற்கவர்கள் சகல அதிகாரமும் 'அல்லாஹ்வுக்குடையதுதான்' என்று கூறுவார்கள். அவ்வாறாயின் நீங்கள் உங்கள் அறிவை எங்கு இழந்து விட்டீர்கள்? என்று கூறும்." (அல்குர்ஆன்: 23:84-89)

October 24, 2009

உலகின் சகல) காரியங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்?

"(நபியே! நீர் அவர்களை நோக்கி) வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரமளிப்பவன் யார்? (உங்களுடைய) கேள்விக்கும், பார்வைக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? )உலகின் சகல) காரியங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்? என்று கேட்பீரானால் அதற்கு அவர்கள் 'அல்லாஹ்' தான் என்று கூறுவார்கள். அவ்வாறாயின் நீங்கள் அவனுக்கு பயந்து வழிபட வேண்டாமா? என்று (முஹம்மதே!) நீர் கேளும்." (அல்குர்ஆன்: 10:31)

October 23, 2009

நல்லதும், கெட்டதும்.

கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு. (திருக்குர்ஆன்: 24:26)

October 22, 2009

தொழுகையின் முக்கியத்துவம்!

(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை. ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான். (திருக்குர்ஆன்: 20:132)

October 21, 2009

அடியார்களின் இரகசிய பரகசியங்களை நன்கு அறிந்த அல்லாஹ்!

நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன்: 17:30)

October 20, 2009

மனிதனின் பகிரங்க விரோதி!

இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன்: 6:142)

October 19, 2009

அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?

எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) "அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" எனக் கேட்பார்கள்; (அதற்கு) "அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்" என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள். (திருக்குர்ஆன்: 7:37)

October 18, 2009

ஈமான் கொண்டோருக்கு அல்லாஹ்வின் அனுமதிகள்!

இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே. உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும், எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார். (திருக்குர்ஆன்:5:5)

October 17, 2009

அல்லாஹ் சாட்சியம் அளிக்கும் பொய்யர்கள்.

''(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிறபோது, 'திண்ணமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கிறோம்' என்று கூறுகின்றனர். திண்ணமாக, நீங்கள் தன்னுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கிறான்'' (திருக்குர்ஆன் 63:1)

October 16, 2009

அல்லாஹ்வின் கட்டளை எனும் வேதனை.

''ஆனால், அவர்கள் (தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கக் கூடிய மேகமாகும்' என்று கூறினார்கள். 'அப்படியல்ல! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது! இது (புயல்) காற்று; இதில் துன்புறுத்தக் கூடிய வேதனை உண்டு' (எனக் கூறப்பட்டது)'' (திருக்குர்ஆன்: 46:24)

October 15, 2009

அனைத்தையும் கண்காணிக்கும் அல்லாஹ்!

''நீங்கள் எதையேனும் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். (நபியின் துணைவியரான) அவர்களின் மீது தம் தந்தையர், தம் புதல்வர்கள், தம் சகோதரர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், தம் (மார்க்கத் தோழியரான) பெண்கள் மற்றும் தம் வலக்கரம் உடைமையாக்கிக் கொண்டவர்கள் (ஆன அடிமைகள்) ஆகியோர் விஷயத்தில் (பர்தாவைக் கைவிடுவதில்) குற்றமில்லை. அல்லாஹ்வுக்கு பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்'' (திருக்குர்ஆன்: 33:54, 55)

October 14, 2009

முகங்களால் நடக்கும் நரகவாசிகள்! உலகில் இரு கால்களால் மனிதனை நடக்க வைத்த அல்லாஹ்வுக்கு இதுவும் இலகுவானதே!

''நரகத்தை நோக்கி தம் முகங்களால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படவிருப்பவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிக மிகத் தவறானதாகும்'' (திருக்குர்ஆன் 25:34)

October 13, 2009

அல்லாஹ் வழங்கும் இயற்கை பேரிடர்களை விட, மனிதர்களில் சிலர் சிலருக்குத் தரும் துன்பம் இலேசானதே!

''(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்களின் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்'' (திருக்குர்ஆன் 06:65)

October 12, 2009

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட நபியே தீர்ப்பு நாளின் சாட்சிகள்!

ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்? (திருக்குர்ஆன்: 04:41)

October 11, 2009

உறுதிமிக்க செயல்களில் இதுவும் ஒன்று!

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணை வைப்போரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (திருக்குர்ஆன்: 03:186)

October 10, 2009

ஈமானிய பலம்!

'இவர்களிடம் 'நிச்சயமாக மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணி திரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்' என்று மக்கள் (சிலர்) கூறினர். ஆனால், இது இவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. 'எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' என்றும் இவர்கள் கூறினார்கள்'' (திருக்குர்ஆன்: 03:173)

October 09, 2009

முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

'(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் 'கோணல்' உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிர்ந்தவர்களோ 'இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன' என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை'' (திருக்குர்ஆன்:03:07)

October 08, 2009

நடுநிலையான சமுதாயம்!

இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (திருக்குர்ஆன்: 02:143)

October 07, 2009

அமைதி அளிக்கும் இடம்!

''மேலும் (நினைவு கூருங்கள்:) நாம் (கஅபா எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒன்று கூடும் இடமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், 'இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக்கொள்ளுங்கள்' என்றும் மக்களுக்கு நாம் கட்டளையிட்டோம்'' (திருக்குர்ஆன்: 02:125)

October 06, 2009

முஃமினாக இருந்து, ஸாலிஹான அமல்கள் செய்த ஆண்களும், பெண்களும் சுவனத்தில்!

"எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள். (அல்குர்ஆன்: 40:40)

October 05, 2009

மன்னிப்பளித்து, மனிதன் செலுத்தும் நன்றியை அங்கீகரித்துக் கொள்ளும் அல்லாஹ்!

ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே (நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!" அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 42:23)

October 04, 2009

அல்லாஹ்வின் வேத வசனங்களை நிராகரித்து, நரக வீட்டை கூலியாக பெற்ற தீயவர்கள்.

அதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம். நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு. (அல்குர்ஆன்: 41:28)

October 03, 2009

அர்ரஹ்மானுக்கு நன்றி செலுத்தும் சுவர்க்கவாசிகள்!

அதற்கு (சுவர்க்கவாசிகள்); "அல்ஹம்துலில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்" என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது. (அல்குர்ஆன்: 39:74)

October 02, 2009

உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்!

(நபியே!) நீர் கூறும்; "ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது. பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்." (அல்குர்ஆன்: 39:10)

October 01, 2009

அர்ரஹ்மானிடம் அச்சமுடையவருக்கே நன்மாராயம்!

(நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக. (அல்குர்ஆன்: 36:11)