Pages

April 30, 2011

வாக்குறுதிகளையும், சத்தியங்களையும் பேணி நடக்காதவர்களின் இழப்பு!

யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் (யாதொரு) நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும் மறுமையில் அவர்கள் (கருணையுடன் பார்க்கவும் மாட்டான், அவர்களை (பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கவும் மாட்டான், மேலும் அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்:3:77)

April 29, 2011

சதி, துரோகத்திற்கு சத்தியத்தை பயன்படுத்தினால்...?

நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்குக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்வதால்) நிலைபெற்ற (உங்களுடைய) பாதம் சறுகி விடும். அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும். (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்:16:94)

April 28, 2011

மனிதனுடைய சத்தியத்தின் மூலம் அல்லாஹ்வின் சோதனை!

“ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர்கள்। நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பது எல்லாம் இதன் மூலமாகத்தான்...” (அல்குர்ஆன்:16:92)

April 27, 2011

அதிகம் சத்தியம் செய்பவனின் இழிவான பண்புகள்!

மேலும் இழிவு உள்ளவனான, அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும், வழிபடாதீர். (அத்தகையவன்) குறை கூறித்திரிபவன் - கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (அல்குர்ஆன்: 68:10,11)

April 26, 2011

விவாக விலக்கில் பிள்ளைகள் மீது அல்லாஹ்வின் கருணை!

தம்மால் (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (எவரேனும்) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும். பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும் உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன்மீது கடமையாகும். எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்குமேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும். இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர்மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 02:233).

April 25, 2011

குஃப்ரான இதுபோன்ற வார்த்தைகளே இறைவேதனையைக் கொண்டு வருகின்றது

‘இன்னும் ”அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு பிள்ளையை எடுத்துக் கொண்டான்!” என அவர்கள் கூறுகின்றனர். நிச்சயமாக நீங்கள் பெரும் அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். இதனால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து, மலைகள் இடிந்து சிதறுண்டு விழப் பார்க்கின்றன. அர்ரஹ்மானுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிட்டதே (இதற்குக் காரணமாகும்.)’ (அல்குர்ஆன்: 19:88-91)

April 24, 2011

இறை போதனையை மறந்த மக்களின் மகிழ்ச்சி நிலையானதா?

அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்து விட்டபோது, சகலவற்றின் வாயில்களையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டோம். தமக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த போது திடீரென அவர்களை நாம் பிடித்தோம். அப்போது அவர்கள் (அனைத்து நலன்களிலிருந்தும்) நிராசையடைந்து விட்டனர்.’ (அல்குர்ஆன்: 6:44)

April 23, 2011

பெருமைக்கொண்டு, குற்றம் புரியும் கூட்டத்திற்கான இறைவேதனையின் வகைகள்!

‘அவர்கள் (மூஸாவிடம்) எம்மை வசப்படுத்துவதற்காக நீர் எந்தவோர் அத்தாட்சியை எம்மிடம் கொண்டு வந்தாலும் நாம் உம்மை நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை என்று கூறினர். வெள்ளப் பெருக்கு, வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் என்பனவற்றைத் தெளிவான அத்தாட்சிகளாக அவர்கள் மீது நாம் அனுப்பினோம். பின்னரும் அவர்கள் பெருமையடித்துக் குற்றம் புரியும் கூட்டத்தினராக இருந்தனர். அவர்களுக்கு வேதனை ஏற்படும் போதெல்லாம், ”மூஸாவே! உமது இரட்சகன் உம்மிடம் எடுத்துக்கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் எமக்காக நீர் பிரார்த்திப்பீராக! நீர் எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கி விட்டால் நிச்சயமாக உம்மை நாம் நம்பிக்கை கொள்வோம். இன்னும் இஸ்ராயிலின் சந்ததியினரையும் உம்முடன் அனுப்பி விடுவோம்!” என்று கூறினர். அவர்கள் அடைந்துகொள்ளும் ஒரு தவணைவரை, அவர்களை விட்டும் வேதனையை நாம் நீக்கும் போதெல்லாம், அவர்கள் வாக்குறுதியை முறித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எமது அத்தாட்சிகளைப் பொய்ப்பித்து, அவற்றை அலட்சியம் செய்பவர்களாக இருந்ததினால், நாம் அவர்களைப் பழிவாங்கிக் கடலில் அவர்களை மூழ்கடித்தோம்.’ (அல்குர்ஆன்: 7:132-136)

April 22, 2011

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இறைவேதனையை தவிர்த்துக் கொள்ளல்!

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன்பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள். (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 39:54)

April 21, 2011

அல்லாஹ்வுக்கு இணைவைத்து அநியாயம் செய்தவர்களின் கைசேதம்!

மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ள யாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாமநாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள். மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும். (அல்குர்ஆன்: 39:47)

April 20, 2011

அல்லாஹ்வின் அத்தாட்சியாகிய உறக்கத்தை சிறிது சிந்தனை செய்தல்!

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 39:42)

April 19, 2011

அல்லாஹ்வைக் கொண்டு திருப்தியடைந்த மனதை உலகின் பொய்யான தெய்வங்கள் பயமுறுத்துமா?

அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர். மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (அல்குர்ஆன்: 39:36)

April 18, 2011

குர்ஆன் ஓதுதலை திரும்ப திரும்ப செவிமடுத்து இதயத்தை இறை தியானத்தால் இளகச் செய்தல்!

அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான். (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும்போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (அல்குர்ஆன்: 39:23)

April 17, 2011

உண்மையை விளங்கிக் கொள்ள அறிவுடையோருக்கு அல்லாஹ் விளக்கும் படிப்பினை!

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான். அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர். பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன்: 39:21)

April 16, 2011

அல்லாஹ்வின்பால் முழுமையாக முன்னோக்குபவர்களுக்கு நன்மாராயம்!

எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்! ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன்: 39:17)

April 15, 2011

உலகில் தனது மன இச்சையைப் பின்பற்றி பொய்யானவற்றை வணங்கிக் கொண்டிருந்தோரின் நஷ்டம்!

"ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்." கூறுவீராக "தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாமநாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க." (அல்குர்ஆன்: 39:15)

April 14, 2011

நிராகரிப்பு எனும் நன்றி மறத்தலை அல்லாஹ் திருப்தி கொள்வதில்லை!

(அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையெதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை. நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன் மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமேயாகும். நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான். நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன். (அல்குர்ஆன்: 39:7)

April 13, 2011

அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்!

(அல்லாஹ்வாகிய) அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான். பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான். அவன் உங்களுக்காக கால்நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான். அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்! அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுகிறீர்கள். (அல்குர்ஆன்: 39:6)

April 12, 2011

அல்லாஹ்வின் வல்லமை மிக்க அத்தாட்சிகள்!

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான். அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான். சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது. (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 39:5)

April 11, 2011

ஒவ்வொரு ஆத்மாவும் தான் உலகில் சம்பாதித்தது என்ன என்பதை அறிந்து கொள்ளும் நாள்!

சூரியன் சுருட்டப்படும்போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது, மலைகள் பெயர்க்கப்படும் போது, சூல் நிறைந்த ஒட்டகங்கள் (கவனிப்பாரற்று) விடப்படும்போது, காட்டு மிருகங்கள் ஒன்று சேர்க்கப்படும்போது, கடல்கள் தீ மூட்டப்படும்போது, உயிர்கள் (உடலுடன்) ஒன்று சேர்க்கப்படும் போது, உயிருடன் புதைக்கப்பட்டவர் எந்தக் காரணத்துக்காகக் கொல்லப்பட்டார் என்று விசாரிக்கப்படும் போது, ஏடுகள் விரிக்கப்படும் போது, வானங்கள் அகற்றப்படும் போது, நரகம் கொழுந்து விட்டு எறியுமாறு செய்யப்படும் போது, சொர்க்கம் சமீபமாகக் கொண்டுவரப்படும் போது ஒவ்வொரு ஆத்மாவும் தாம் கொண்டுவந்ததை அறிந்து கொள்ளும். (அல்குர்ஆன்:81:1-14)

April 10, 2011

இறுதி நாளில் பூமியின் நிலை!

இப்பூமி கடும் அதிர்ச்சிக்கு உட்படுத்தப்படும்போது, மேலும் இப்பூமி, தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது, இதற்கு என்ன நேர்ந்தது என்று மனிதன் கேட்கும் போது, உமது இறைவன் இதற்குக் கட்டளையிட்டதால் அந்நாளில் அது தன் செய்திகளை அறிவிக்கும். அந்நாளில் மக்கள் தமது செயல்கள் காண்பிக்கப்படுவதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள். (அல்குர்ஆன்:99:1,2)

April 09, 2011

நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரித்தவர்களின் தோற்றம்!

‘அந்த நாளில் சில முகங்கள் வெண்மையாகவும், மற்றும் சில முகங்கள் கறுப்பாகவும் இருக்கும். எவரது முகங்கள் கறுப்பாக உள்ளனவோ அவர்களிடமும் ‘நீங்கள் நம்பிக்கை கொண்டபின் நிராகரித்தீர்கள் அல்லவா? நீங்கள் நிராகரித்ததற்காக இந்த வேதனையைச் சுவையுங்கள் (என்று கூறப்படும்)”. (அல்குர்ஆன்:3:100)

April 08, 2011

யாரும் யாரைப் பற்றியும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு கொடூரமான அந்த நாள்!

ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பார்ப்பான் (ஆனாலும்) ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள். குற்றம் புரிந்தவன் அந்த நாளின் வேதனையிலிருந்து தப்புவதற்காக தன் மக்களையும், மனைவியையும், சகோதரனையும் அவனை அரவணைத்துக் கொண்டிருந்த சுற்றத்தாரையும், இன்னும் பூமியில் உள்ள அனைவரையும் ஈடாகக் கொடுத்து (தான் மட்டும்) தப்பித்துக் கொள்ள விரும்புவான். (அல்குர்ஆன்:70:10-14)

April 07, 2011

உறவுகள் நம்மை விட்டும் வெருண்டோடும் தீர்ப்பு நாள்!

(தீர்ப்பு வேளையாகிய) அந்த நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் ஓடுவான். அன்றைய தினம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் நிலையைப் பற்றி எண்ணவே சரியாயிருக்கும். (அல்குர்ஆன்:80:34-37)

April 06, 2011

தீர்ப்பு நாளில் மனிதனின் நிலை!

அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அன்றியும் அவர்கள் செய்வதை பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும். அவர்களின் கால்களும் சாட்சி கூறும். (அல்குர்ஆன்:86:65)

அந்த நாள் வரும் போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது. (அல்குர்ஆன்:11:105)

இது அவர்கள் பேச முடியாத நாள். ஏதேனும் சமாதானம் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்:77:35)

அனைத்து சப்தங்களும் (அந்நாளில்) ஒடுங்கிவிடும். காலடிச் சப்தத்தைத் தவிர வேறு எதனையும் நீர் செவியுற மாட்டீர். (அல்குர்ஆன்:20:108)

April 05, 2011

அல்லாஹ்வை நிராகரிக்கும் காஃபிர்களுக்கு கஷ்டமான நாள்!

எனவே நபியே அவர்களை அலட்சியப்படுத்தி விடுவீராக. அவர்கள் வெறுக்கக் கூடிய ஒன்றுக்காக (விசாரணைக்காக) அழைப்பாளர் அழைக்கும் நாளில் அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். பரவிச் செல்லும் வெட்டுக்கிளிகளைப் போல் புதைகுழிகளிலிருந்து அவர்கள் வெளிப்படுவார்கள். அழைப்பாளரிடம் விரைந்து வருவார்கள். இது மிகவும் கஷ்டமான நாள் என்று அக்காஃபிர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 54:6-8)

April 04, 2011

மாபெரும் நிகழ்ச்சி!

சூரில் ஒரே ஒரு முறை ஊதப்பட்டதும், இப்பூமியும் மலைகளும் தூக்கப்பட்டு ஒரேயடியாகத் தகர்க்கப்படும் போது அந்நாளில் தான் அந்த (மாபெரும்) நிகழ்ச்சி நடைபெறும். வானம் பிளந்து விடும். அந்நாளில் அது பலவீனப்பட்டதாக இருக்கும். வானவர்கள் வானத்தின் கோடியில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை தங்களுக்கு மேல் எட்டு வானவர்கள் சுமந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 69:13-17)

April 03, 2011

அல்லாஹ்வால் நேரங் குறிப்பட்ட கியாமத் நாள்!

‘நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்’. (அல்குர்ஆன்:78:17,18)

April 02, 2011

அல்லாஹ்வுக்கு சந்ததியை ஏற்படுத்திய பொய்யர்களான யூத, கிறிஸ்தவர்கள்

அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள். (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன. (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா? (அல்குர்ஆன்: 10:68)

April 01, 2011

வெறும் கற்பனைகளையும், யூகங்களையும் கொண்ட அல்லாஹ் அல்லாத பொய் தெய்வங்கள்!

அறிந்து கொள்ளுங்கள் வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே. (அல்குர்ஆன்: 10:66)